Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: நாசா

செப்டம்பர் 19, 2019 03:53

பெங்களூரு: நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்த விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா கூறியுள்ளது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 2 விண்கலத்தை கடந்த ஜூலை 22ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. கடந்த 7 ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், 400 மீ., உயரத்தில், லேண்டர் வரும் போது , திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால், விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சந்திரயான் - 2 ஆர்பிட்டர் மூலம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்தை இஸ்ரோ கண்டுபிடித்தது. லேண்டரில் இருந்த ரோவர், நிலவில் ஒரு நாள் ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நிலவில் ஒர நாள் என்பது, பூமியில் 14 நாட்கள் ஆகும். இதனால், 14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ தீவிர முயற்சி செய்தது.

இஸ்ரோவுக்கு உதவ நாசாவும் முன்வந்தது. நாசா சார்பில், கடந்த 2009ம் ஆண்டுஅனுப்பப்பட்ட 'நிலவு புலனாய்வு ஆர்பிட்டர்' (எல்ஆர்ஓ) நிலவை சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆர்பிட்டர், தென் துருவ பகுதியில், விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் செல்லும் போது படம் பிடிக்கவும், தொடர்பை ஏற்படுத்தவும் முயற்சி செய்யப்பட்டது. இதில் கிடைக்கும் படங்கள், தகவல்கள் அனைத்தும், இஸ்ரோவுடன் பகிரப்படும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே, விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த 'ஹலோ' என்ற ரேடியோ தகவலை நாசா அனுப்பி இருந்தது.

இந்நிலையில், எல்ஆர்ஓ ஆர்பிட்டராலும், விக்ரம் லேண்டரை சமிஞ்சை மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், படம் பிடிக்க முடியவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது. நிலவில் இருக்கும் நிழல் காரணமாக லேண்டரை, நாசாவால் படம்பிடிக்க முடியவில்லை என தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்