Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவாவடுதுறை ஆதீன மடத்தில் வெள்ளை வேட்டிகள் ஆதிக்கம்: காசி யாத்திரை சென்ற சுவாமிநாதன் தகவல்

செப்டம்பர் 19, 2019 05:49

தஞ்சாவூர்: கும்பகோணம்- திருவாவடுதுறை ஆதீன மடத்தில் வெள்ளை வேட்டிகளின் ஆதிக்கம் உள்ளது என மடத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் கட்டளைத் தம்பிரானாக கடந்த 4 ஆண்டுகளாக இருந்த சுவாமிநாத தம்பிரான், திருவாவடு துறை ஆதீனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதால், கடந்த 16-ம் தேதி காசி யாத்திரை சென்றார்.

இந்நிலையில், சுவாமிநாத தம்பிரான் காசியில் இருந்து தொலைபேசி மூலம் கூறியதாவது: ஆன்மிக பற்றால் நான் குடும்ப உறவைத் துறந்து திருவாவடுதுறை ஆதீனத் துக்கு வந்தேன். தம்பிரானாக நியமிக்கப்பட்டேன். மகாலிங்கசுவாமி கோயில் கட்டளை தம்பிரானாக இருந்து எந்த செயலையும் ஆதீன குருமகா சந்நிதானத்தின் உத்தரவு பெற்றுத்தான் முறையாக செய்தேன்.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி தலைமை மடத்துக்கு ஒரு உத்தரவு வந்தது. அதன்படி, மடத்துக்குச் சென்றபோது, குருமகாசன்னி தானம் என்னை தம்பிரான் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக கூறினார். அதை குருவின் உத்தரவாக எண்ணி ஏற்றுக்கொண்டேன். அப்போது, எனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, தம்பிரான் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதித் தந்தேன்.

நான் ஆன்மிகம், ஆதீன சம்பிர தாயத்துக்கு புறம்பாக என்றும் நடந்து கொண்டதில்லை. என்னை விடுவித்த விதம் தான் சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. மடத்தில் உள்ள ஒருசில 'வெள்ளை வேட்டிகளின் ஆதிக்கம்' தான் அதற்கு காரணம். நான் மீண்டும் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் என்று கூறி உரிமை கோரமாட்டேன். யாருக்கும் எவ்வித அச்சமும் வேண்டாம்.

வெள்ளை உடையுடன் காசிக்கு வந்த நான் கங்கையில் புனிதநீராடி மீண்டும் காவி உடையை அணிந்து கொண்டேன். நான் தொடர்ந்து சந்நியாச வாழ்க்கையைத்தான் வாழ்வேன்.சுவாமிநாத பரதேசியாக பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்கிறேன். பரதேசி என்பவர் யாசித்து வாழ்பவர். யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்ல என்றார்.
 

தலைப்புச்செய்திகள்