Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை: 2 மாணவிகள் கடத்தல், குழந்தையுடன் இளம்பெண் மாயம்

செப்டம்பர் 19, 2019 10:43

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மங்களப்பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவி அரசு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 9-ந்தேதி கல்லூரி சென்ற இவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மாணவியை, நத்தம் அருகே உள்ள சமுத்திரப்பட்டியை சேர்ந்த சம்சுதீன் மகன் அப்பாஸ் (19) கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், அப்பாசையும் தேடி வருகிறார்கள்.

திருமங்கலம் திருமலை பாலாஜி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் டியூசன் செல்வதாக மாணவி வீட்டில் கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, திருமங்கலம் கற்பகம் நகரைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் மோனீஸ்வர் (19) மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியை தேடி வருகிறார்கள்.

மதுரை இளமனூர் ராணிமங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ். இவரது மனைவி ஐஸ்வர்யா (21). இவர்களுக்கு ஒரு வயதில் சவுந்தரநாயகி என்ற மகள் உள்ளார்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யா குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கிருந்து அவர் திடீரென குழந்தையுடன் மாயமாகி விட்டார்.

இதுகுறித்து ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன் போலீசில் புகார் செய்தார். சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்