Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவிகிதம் மழைநீர் தேங்காத நிலை ஏற்படும்: ஆணையாளர் கோ.பிரகாஷ்

செப்டம்பர் 20, 2019 12:21

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பருமழை காலங்களில் வெள்ளத்தடுப்பு, மீட்பு பணிகள் மற்றும் சுகாதார தூய்மை பணிகளை மேற்கொள்ள 35,476 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியில் பருமழை காலங்களில் அதிக மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து தேவையான இடங்களில் அதிக குதிரைத்திறன் கொண்ட பம்பு  செட்டுகள் இருப்பு வைத்திடவும்,  மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில், விரைந்து பணிகள் முடிக்கவும், தண்ணீர் தடையில்லாமல் செல்கின்ற வகையில் இணைப்புகள் ஏற்படுத்திடவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழைக்காலங்களில் பல்வேறு விதமான தொற்றுநோய்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும், அவைகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு, மீட்பு பணிகள் மற்றும் சுகாதார தூய்மை பணிகளை மேற்கொள்ள 35,476 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி 1,894கி.மீ. நீளத்திற்கு 7,351 எண்ணிக்கையில் மழைநீர் வடிகால்களை பராமரித்து வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 468 இடங்களில் சுமார் ரூ.440 கோடியில் மதிப்பீட்டில் 155.49கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்க பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 85ரூ சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மழைநீர் வடிகால்களில் சுமார் ரூ.35.05 கோடி செலவினத்தில் தூர்வாரும் பணிகள் மற்றும் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 50, 25, 10 மற்றும் 5 குதிரைத் திறன் கொண்ட 570 மோட்டார் பம்புகள், 130 ஜெனரேட்டர்கள், 371 மரஅறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார்நிலையில் உள்ளன.

மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களை தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்ய தேவையான பொருட்களும் மற்றும் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு  குடிநீர் வழங்க 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும், 52 இடங்களில்  பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார்நிலையில் உள்ளனர். பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு 1  இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார்நிலையில் உள்ளன.

மாநகராட்சியினால் பராமரிக்கப்படும் 30 பெரிய கால்வாய்கள் நவீன இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகளும், ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை மூன்று ரொபோடிக் மண்தோண்டும் கருவிகள் மூலம் சிறிய கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று 8,373 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆம்பிபியன் வாகனம் மூலம் 2,900 மெட்ரிக் டன் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.3,000 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கடந்த காலங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கிய நிலை மாறி தற்போது  100க்கும் குறைவான இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. 

அவ்விடங்களிலும் மழைநீர் தேங்கா வண்ணம் சாலையோர உறை கிணறுகள் அமைத்தல் மற்றும் இதர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் கோவளம் மற்றும் கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதிகளில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த  மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவுற்றால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவிகிதம்  மழைநீர் தேங்காத நிலை ஏற்படும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்