Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு நாள் பெய்த மழை: 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்தது

செப்டம்பர் 21, 2019 04:57

சென்னை: சென்னையில் கடந்த 18-ந் தேதி இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த இந்த மழையால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. சென்னைக்கு புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த ஏரிகள் வறண்டு காட்சி அளித்தன.

இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி புழல் ஏரி பகுதியில் 9 செ.மீ. மழையும், சோழவரம் ஏரியில் 13 செ.மீ., செம்பரம்பாக்கம் ஏரியில் 3 செ.மீ., பூண்டி ஏரியில் 20 செ.மீ. மழையும் பதிவானது. சென்னையில் 10 செ.மீட்டர் மழை பெய்தது.

இந்த மழை வறண்டு கிடந்த ஏரிகளுக்கு புத்துயிர் ஊட்டி உள்ளது. மேலும் சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கவும் கைகொடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய பெய்த மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஒரே நாள் பெய்த மழையால் 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. தற்போது (நேற்றைய நிலவரப்படி) பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2,242 கன அடியும், சோழவரம் ஏரிக்கு 347 கன அடியும், புழல் ஏரிக்கு 315 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 93 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது’ என்றார்.

தலைப்புச்செய்திகள்