Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம்: உதித் சூர்யாவுக்கு முன்ஜாமீன் மறுப்பு

செப்டம்பர் 24, 2019 11:33

மதுரை: சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கலந்தாய்வில் பங்கேற்று, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார், மாணவர் உதித்சூர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் உதித்சூர்யாவை பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டு அவரை தேடி வந்தனர். ஆனால், அவர் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவருடைய உறவினர்கள் வீடு, அவருடைய தந்தையின் நண்பர்கள் வீடுகளிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.  இதன்மீது நடந்த விசாரணையில், நீட் ஆள்மாறாட்ட விசாரணைக்காக உதித் சூர்யா சி.பி.சி.ஐ.டி.யிடம் சரணடைய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.

உதித் சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி. கைது செய்தால் முன்ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக விசாரிக்க தயார் என்று தெரிவித்துள்ளது.  உதித் சூர்யாவுக்கு போலீஸ் காவல் வழங்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்