Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடந்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரத்து 512 குழந்தைகள் மீட்பு: ரெயில்வே டி.ஜி.பி சைலேந்திரபாபு பேட்டி

செப்டம்பர் 25, 2019 07:15

சென்னை: சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் குழந்தைகள் உதவி மையம் சார்பில் ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் ஒருநாள் குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புக்கு ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பி.எம்.நாயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழக ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

இந்தியாவில் ஒரு வருடத்தில் காணாமல் போகும் 1,500 குழந்தைகளில் 40 பேர் என்ன ஆகின்றனர் என்பதே தெரியவில்லை. ரெயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பது அங்கு வரும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக உணர வைக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு போலீசார் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் மிக பாதுகாப்பாக உணர்கின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழக ரெயில்வே போலீசார் 7 ஆயிரத்து 512 குழந்தைகளை மீட்டுள்ளனர். இதில் 699 பேர் பெண் குழந்தைகள் ஆகும். தற்போது ‘உதயம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில்வே ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என அனைவருமே குழந்தைகளை தடுக்க செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார், கமிஷனர் சந்தோஷ் என்.சந்திரன், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்