Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2 மாத வாடகை தான் அட்வான்சாக வாங்கணும்

செப்டம்பர் 27, 2019 04:48

புதுடில்லி: வீடுகளை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகையை மட்டுமே, முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக பெற வேண்டும்' என, மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், வாடகை வீட்டு வசதியை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசு துவக்கியுள்ளது.இதில், வாடகை வீட்டு வசதி மாதிரி சட்ட வரைவை, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழகத்தில், 'நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் உரிமைகள், பொறுப்புகள் சட்டம் - 2017' நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், பல்வேறு திருத்தங்களுக்கு பின், பிப்ரவரி, 22ல் அமலுக்கு வந்துள்ளது.இதற்காக, 32 மாவட்டங்களிலும் வாடகை வீட்டுவசதி ஆணையம், வாடகை தொடர்பான வழக்குகளுக்காக, 32 நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வாடகை தீர்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதற்குமான மாதிரி வாடகை வீட்டுவசதி சட்டத்தை, மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மீது, பொது மக்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.இந்த மாதிரி சட்டத்தில், வாடகைதாரர்களின் உரிமைகளுக்கு இணையாக, நில உரிமையாளர்களின் உரிமைகளுக்கும், பாதுகாப்பு அளிக்கும் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, வீட்டை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகைக்கு இணையான தொகையை மட்டுமே முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக வசூலிக்க முடியும்.

வாடகையை உயர்த்த வேண்டும் என்றால், அது குறித்து, குடியிருப்போருக்கு, மூன்று மாதங்களுக்கு முன் அறிவிக்க வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், வாடகைதாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால், அவருக்கு அபராதம் விதிக்க, இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதன்படி, ஒப்பந்த காலத்துக்கு பின், ஒவ்வொரு மாதத்துக்கும், இரு மடங்கு வாடகையை, உரிமையாளர் வசூலிக்க முடியும். பெருநகரங்களில் வணிக நோக்கில், வாடகை வீட்டுவசதி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தும் வகையில், புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்