Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் ஆள்மாறாட்டம்: புரோக்கர் ஜோசப்பின் திருவனந்தபுரம் பயிற்சி மையத்தில் விசாரணை

செப்டம்பர் 27, 2019 09:53

சென்னை: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் மாணவர் உதித் சூர்யாவின் தந்தையான அரசு மருத்துவர் வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆள் மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ஜோசப் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

திருப்பதியில் குடும்பத்துடன் பதுங்கி இருந்த உதித் சூர்யாவை தமிழக போலீசார் கைது செய்தனர். உதித் சூர்யா குடும்பத்தினர் கூண்டோடு கைது செய்யப்பட்டு தேனிக்கு அழைத்துவரப்பட்டு பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் போது, மகனை மருத்துவராக்க ஆள் மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் வெங்கடேசன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் வெங்கடேசன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இடைத்தரகர் ஜோசப் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விசாரணைக்காக தமிழகம் கொண்டுவரப்பட உள்ளார்.

இதனிடையே திருவனந்தபுரத்தில் இடைத்தரகர் ஜோசப் நடத்தி வந்த நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தினர். நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் ஆள் மாறாட்ட மோசடிகளை ஜோசப் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனால்தான் ஜோசப்பை உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் எளிதாக அணுகியிருக்கிறார். ஜோசப்பின் பயிற்சி மையத்தில் உள்ள ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர் சிபிசிஐடி போலீசார்.

தலைப்புச்செய்திகள்