Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

100 நோட்டு அடங்கிய ஒரு கட்டின் மதிப்பு 6 கோடி: கள்ள நோட்டில் தடவப்படும் போதை பொருள்

செப்டம்பர் 28, 2019 05:57

மார்த்தாண்டம்: குமரியில் பிடிபட்ட கும்பலிடம் அதிக வீரியம் உடைய போதை  பொருளை கள்ளநோட்டில் தடவி முகர்ந்தால் 3 நாளுக்கு போதை இருக்கும் என்ற விவரம் தெரியவந்துள்ளது. மார்த்தாண்டம்  பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து  ஏஎஸ்பி சாஸ்திரி மேற்பார்வையில் 5 பேர்   கொண்ட  தனிப்படை அமைக்கப்பட்டது. 

இது குறித்து விசாரணை நடத்திய தனிப்படையினர், ஜேக்கப்  (46), பூசாரி   ஷிபுசாமி (47), கிறிஸ்டின் ஜெயசேகர் (39), மணிகண்டன், கேரள மாநிலம் காட்டாக்கடையை  சேர்ந்த  சவுத் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.   கட்டு கட்டாக கள்ளநோட்டுகளும் இயந்திரங்களும் பறிமுதல்  செய்யப்பட்டன. இவர்களில், சவுத், மும்பை சர்வதேச போதை பொருள் கடத்தல்  கும்பலுடன் தொடர்பு உள்ளவர். 

இந்த கும்பல் அதிக வீரியம் உடைய போதை  பொருளை வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு கடத்தி வந்து கேரளா,  தமிழகத்தில் விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த  வகை போதை பொருளை ரூபாய் நோட்டில் சிறு சிறு புள்ளிகளாக வைப்பார்கள். ஒரு புள்ளியை  முகர்ந்தால் 3 நாளுக்கு மேல் போதை அப்படியே இருக்குமாம்.

ஒரு  நோட்டில் 20க்கும் மேற்பட்ட புள்ளிகள் வைக்கலாம். இவ்வாறு போதை பொருள்  புள்ளிகள் வைக்கப்பட்ட 100 நோட்டுகள் அடங்கிய ஒரு கட்டு ₹6 கோடி மதிப்பு  உடையது என்று கூறப்படுகிறது. இந்த போதைபொருளுக்கு கள்ளச்சந்தையில் அதிக மவுசு இருக்கிறது. ஆனால்  இவற்றை கடத்தி வருவதில் பல சிக்கல்கள் இருப்பதால் குமரி மாவட்டத்தை சேர்ந்த சுய உதவி  குழு பெண்களை தேர்வு செய்து கடத்தலுக்கு பயன்படுத்த முடிவு செய்து உள்ளனர். 

தேர்ந்தெடுக்கும் பெண்களை  மும்பைக்கு விமானத்தில் அழைத்து சென்று, அங்கிருந்து போதை பொருள் அடங்கிய  ரூபாய் நோட்டுகட்டை கொடுத்து ரயிலில் திருப்பி அனுப்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்கள்  திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் வழக்கில் பிடிபட்டுவிட்டனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் அடுத்த  கட்டத்தை விசாரணையை போலீசார் ேமற்கொண்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்