Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

செப்டம்பர் 28, 2019 06:05


இராமேசுவரம்: ஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். குறிப்பாக வருடத்தில் தை,ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது. அதன்படி மகாளய அமாவாசை நாளான இன்று நீர்நிலைகள், கோவில்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் ரெயில், பஸ், கார்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

அமாவாசை நாளான இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் குவிந்து புனித நீராடினர். பின்னர் அவர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

மகாளய அமாவாசை

ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிய பக்தர்கள் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் செல்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் வருகையையொட்டி நகராட்சி சார்பில் குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தன. ராமேசுவரம் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதே போல் மண்டபம் அருகே உள்ள சேது கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

தலைப்புச்செய்திகள்