Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானிக்கு அடுக்குமாடி குடியிருப்பு: சிபிஐ விசாரணை?

செப்டம்பர் 30, 2019 03:32

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமாணி, அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தர விட்டிருப்பதாக,  தனியார் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2018 ஆகஸ்ட் 12ல் வி.கே.தஹில் ரமானி பதவியேற்றுக் கொண்டார். சில வாரங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உச்ச நீதிமன்ற  மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆக. 28ம் தேதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்ற  முடிவை எடுத்தது. ஆனால், இந்த இடமாற்ற முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை மனுவை அனுப்பினார். ஆனால்  இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இதன் நகலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அனுப்பினார். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அந்த கடிதத்தில், ‘உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்கப்படுகிறது. இதனை, மத்திய சட்ட அமைச்சகம்  வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, சென்னை புறநகரில் 3 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு அவர் அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகளை வாங்கியுள்ளார். அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் மத்திய உளவுத்துறை 5 பக்க  அறிக்கையை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதில் தஹில்ரமாணி அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்தும், சிலைக்கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அமர்வை அவர் தள்ளுபடி செய்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தனியார்  ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்  உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்