Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2014 சிறுசேரி பெண் பொறியாளர் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

செப்டம்பர் 30, 2019 02:13

டெல்லி: 2014-ல் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. 

ஐ.டி. பெண் ஊழியர் படுகொலை

சென்னையை அடுத்த சிறுசேரியில், 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.மேலும், உயிரிழந்த உமா மகேஸ்வரி குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சத்தை 4 மாதத்தில் அளிக்க வேண்டும் என்றும், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம் 

இதை எதிர்த்து உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகிய மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து 3 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூவரும் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது. 

தலைப்புச்செய்திகள்