Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் போலீஸ்காரரை நோக்கி துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

செப்டம்பர் 30, 2019 02:54

சென்னை: சென்னை செங்குன்றம் சோலையம்மாள் நகரில் ஆயுதப் படையை சேர்ந்த காவலர் வெற்றிவேல் என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராமநாதன் என்பவர், இது தன்னுடைய இடம் என்று கூறி, அவர்கள் ஏன் அங்கு நின்று பேசுகிறார்கள் என்று கேட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.

தான் நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருப்பதில் என்ன தவறு என காவலர் கேட்டதையடுத்து, வாக்குவாதம் முற்றியதில் ராமநாதன் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தரையைப் பார்த்து மூன்று முறை சுட்டதாக காவல்துறை கூறுகிறது.

இந்து அமைப்பு

இதையடுத்து மாதவரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்த நபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்த பிஸ்டலும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்தபோது ராமநாதன் குடி போதையில் இருந்ததாகவும் அவர் அகில இந்திய பாரத இந்து அமைப்பு என்ற அமைப்பு ஒன்றை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.

தன்னிடமிருந்த துப்பாக்கிக்கு ராமநாதன் மணிப்பூரில் உரிமம் பெற்றிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ராமநாதன் மீது செம்மரக் கடத்தல் வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலைப்புச்செய்திகள்