Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையடுத்து பாதுகாப்பு பணிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு

அக்டோபர் 02, 2019 05:12

சென்னை: பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டதோடு, ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட தள்ளுவண்டி, மற்றும் பெட்டிக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. கடைகளை அகற்றிய பகுதிகளில் பூஞ்செடிகள் வைக்கப்பட்டு வருவதால் மாமல்லபுரம் நகரமே புதுபொலிவோடு காட்சி தருகிறது.

மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள வரலாற்று காட்சிக் கூடத்துடன் கூடிய நுழைவு சீட்டு கட்டிடத்தை தலைவர்கள் இருவரும் சேர்ந்து திறந்து வைக்க உள்ளனர். இதையடுத்து அதன் அருகே இருநாட்டு நட்புறவையும் உணர்த்தும் வகையில் இரண்டு யானைகளுடன் கூடிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாடாக மாமல்லபுரம், கல்பாக்கம், தேவநேரி, கொக்கிலமேடு, சூலேரிக்காடு, நெம்மேலி, பட்டிபுலம் பகுதி மீனவர்கள் வருகிற 6-ந்தேதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்லக்கூடாது எனவும், கடலோர பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர். 

இந்தநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வெளியுறவு செயலர் விஜய் கேஷவ் கோகலே, மத்திய உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலர் சண்முகம் ஆகியோர் நேற்று மாமல்லபுரம் வந்திருந்தனர். பணிகளை வேகப்படுத்தி மாமல்லபுரத்தை 10-ந் தேதிக்குள் பசுமை நகரமாகவும் மாற்றி குப்பைகள் இல்லாத தூய்மை நகரமாகவும், புதுப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். 

கடற்கரை கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் உத்தரவிட்டனர். மாமல்லபுரம் முழுவதும் பன்மடங்கு பாதுகாப்பு பலப்படுத்துமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளதை அடுத்து உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே முன்னேற்பாடுகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாமல்லபுரம் செல்கிறார். அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கிறார். 

தலைப்புச்செய்திகள்