Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் பிரபலமாகும் மாவுக்கட்டு தற்போது புதுச்சேரியிலும்

அக்டோபர் 02, 2019 05:38

புதுச்சேரி: புதுச்சேரியில், பொதுமக்கள் முன்னிலையில் காவலர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடி, தவறி விழுந்து காலை முறித்துக் கொண்டுளார். 

கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய பணியில் இருந்த காவலர்களான சிவகுரு மற்றும் மைக்கேல் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கரிக்கலாம்பாக்கம் மக்கள் கூடும் பிரதான சந்திப்பில் கையில் கத்தியுடன் சில ரவுடிகள் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

காவலர்கள் இருவரும் அங்கு சென்று விசாரித்த போது, ரகளையில் ஈடுபடவர்கள் சிதம்பரம் பெட்ரோல் பங்க் ஊழியர்களைக் கத்தியால் தாக்கிப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ரவுடி ஜோசப், அவனது கூட்டாளிகளான அய்யனார் மற்றும் அருணாசலம் என்பது தெரியவந்தது. அவர்களில் முக்கிய ரவுடி ஜோசப்பை மடக்கி பிடித்தனர்.

ரவுடியை இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துவர முயற்சித்த சமயம், தப்பி ஓடிய ரவுடிகள் இருவரும் வந்து காவலர்களை தடுத்தனர். இதை சாதகமாக்கிய ரவுடி ஜோசப் கூட்டாளிகளுடன் சேர்ந்து போலீசை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினான்.

நடுரோட்டில் காவல்துறையினரை ரவுடிகள் புரட்டி எடுத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையின் அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 2 போலீஸாரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான ரவுடி ஜோசப், கண்டமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் மற்றும் வில்லியனூர் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து அங்கு சென்றனர்.

கண்டமங்கலத்தை அடுத்த ஆலமரத்து குப்பம் கரும்பு தோட்டத்தில் ஜோசப் பதுங்கி இருப்பதை கண்டு அவனை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை கண்ட உடன் தப்பித்து ஓடினான் ஜோசப். அவனை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயற்சித்தபோது போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த ஜோசப்புக்கு வலது கை மற்றும் இடது காலில் முறிவு ஏற்பட்டது. அவனை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்து மாவுக்கட்டு போட்டு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

புதிய டிஜிபி பாலாஜி ஸ்ரீ வத்சவா உத்தரவின் பேரில் போலீசாரை தாக்கிய ரௌடிக்கு மனிதாபிமான அடிப்படையில் மாவுக்கட்டு போடப்பட்டது இதுவே முதல்முறை. இதனை வரவேற்று அனைத்து போலீசாரும் தங்களுடைய வாட்ஸ் ஆப் டிபி (DP ) -ல் மாவு கட்டு போட்ட ரௌடி போட்டோவை வைத்துள்ளனர். மேலும் சில போலீசார் "என் இனத்தின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது" என வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் வைத்துள்ளனர். 

மேலும் இரு ரவுடிகளைத் தேடி வரும் நிலையில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க போலீசாரின் மாவுக்கட்டு போடும் மனித நேயப் பணி தொடரட்டும் என பலரும் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்