Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடக சிறுவனை கவுரவித்த அமெரிக்க வெள்ளை மாளிகை

அக்டோபர் 02, 2019 06:47

பெங்களூரு: இந்திய பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி ஏற்ற பின்பு ஒருவார காலம் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் முதலில் அவர் உலகின் எரிசக்தி தலைநகரம் என்ற சிறப்பை பெற்றுள்ள ஹூஸ்டன் நகருக்கு சென்றார். பிரதமர் மோடியின் ஹூஸ்டன் நகர பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக என்.ஆர்.ஜி. மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மோடி நலமா?’ (ஹவ்டி மோடி) பிரமாண்ட நிகழ்ச்சி அமைந்தது.

இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த சாத்விக் என்ற 13 வயது சிறுவனும் கலந்து கொண்டு அசத்தினான். அதைவிட அவன் விழா மேடையில் மோடியும், டிரம்பும் ஒன்றாக நடந்து வந்தபோது அவர்களிடம் ‘செல்பி’ ஒன்று எடுக்க வேண்டும் என்று கேட்டான். சிறுவன் சாத்விக்கின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதமர் மோடியும், டிரம்பும் ஒன்றாக சேர்ந்து நின்று அந்த சிறுவனுக்கு போஸ் கொடுத்தனர். அதையடுத்து அவர்களுடன் சேர்ந்து சிறுவன் தனது செல்போனில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டான்.

மாபெரும் உலக தலைவர்களான மோடியும், டிரம்பும் கர்நாடக சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதற்கிடையே சிறுவன் சாத்விக், பிரதமர் மோடி மற்றும் டிரம்புடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ‘செல்பி’ புகைப்படம், அந்த நிகழ்வு தொடர்பான வீடியோ ஆகியவற்றை அமெரிக்க வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அது சிறுவன் சாத்விக்கின் செயலை பாராட்டி கவுரவித்துள்ளது.

இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சிறுவன் சாத்விக்கின் பெற்றோர் கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்புரா தாலுகா கர்கிசவல் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் - மேதா தம்பதியின் மகன் ஆவார். கடந்த 17 வருடங்களுக்கு முன்பே இந்த தம்பதி அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் குடியேறி அங்கேயே வேலை பார்த்து வருகிறார்கள்.

சிறுவன் சாத்விக் அங்குள்ள ஹூஸ்டன் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறான். விடுமுறை நாட்களில் மட்டும் அவன் அமெரிக்காவில் இருந்து தனது பெற்றோருடன் உத்தர கன்னடாவுக்கு வந்து செல்வான் என்று கூறப்படுகிறது. சிறுவன் சாத்விக்கின் தாத்தா - பாட்டி மற்றும் உறவினர்கள் கர்கிசவல் கிராமத்தில் தான் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்