Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணிக்கு தேசிய விருது: பிரதமர் வழங்கினார்

அக்டோபர் 02, 2019 05:22

அகமதாபாத்: மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் ஊரகப் பகுதிகளின்  சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கிய அளவீடுகளை தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் - 2019 மூலம் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்தியாவில் உள்ள 690 மாவட்டங்களில் உள்ள 17,400 த் கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் 31 ஊரக மாவட்டங்களில் உள்ள 800க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்த  தூய்மை கணக்கெடுப்பு  மேற்கொள்ளப்பட்டது. இந்த மாதிரி தூய்மை ஆய்வுகள் கீழ்க்கண்ட முக்கிய 3 காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு  செய்யப்பட்டுள்ளது. அதாவது, பொது இடங்களாகிய பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமச் சந்தைகள் , வழிபாட்டு தலங்கள் போன்றவற்றில் தூய்மை குறித்து நேரடி கள ஆய்வு 30 சதவீதம் செய்யப்பட்டுள்ளது. 

அடுத்ததாக கிராமப்புறங்களில் பல்வேறு தகவல்கள் அறிந்த முக்கிய நபர்கள் மற்றும் பொதுமக்களிடம் தூய்மை குறித்த கருத்து 35 சதவீதம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மைக்கான கட்டமைப்பு வசதிகளின் செயல்திறன் முன்னேற்றம் குறிப்பாக வீடுகளில் கழிப்பறை வசதிகள், ஒருங்கிணைந்த சமுதாய கழிப்பறைகள் ஆகியவை பற்றி 35 சதவீதம் பற்றி கள ஆய்வு செய்யப்பட்டது.   இந்த ஆய்வுகளில் மாவட்டத்திற்கான மதிப்பெண்கள்  கிராமங்கள் பெறும் மதிப்பெண்களின்  சராசரி ஆகும். அதே போல் மாநிலத்திற்கான மதிப்பெண்கள் மாவட்டங்கள் பெறும் மதிப்பெண்களின் சராசரியாகும்.

மேற்படி அகில இந்திய அளவில்   மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாட்டை தேசிய அளவில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், ஊரக தூய்மை கணக்கெடுப்பில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டதற்கான  மத்திய அரசின் தேசிய  விருதை  தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலு மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்