Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்டிரல் ரெயில் நிலைய நடைமேடைகளில் ரோந்து பணியில் ஈடுபடும் ரெயில்வே பாதுகாப்புபடைக்கு நவீன வாகனம்

அக்டோபர் 03, 2019 04:34

சென்னை: தெற்கு ரெயில்வேக்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையத்திலும் நேற்று மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ரெயில்வே அமைச்சகம் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை, பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளிடம் கடந்த மாதம் 11-ந்தேதியில் இருந்து தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்தவகையில் சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். தூய்மை குறித்த தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக பொது மேலாளர் ஜான் தாமஸ் ‘சபாய்’ செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார்.

இந்த செல்போன் செயலி மூலம் ரெயில் நிலையங்கள், ரெயில்களில் பயணிகள் தூய்மை குறித்த நிறைகுறைகளை தெரிவிக்கலாம். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புபடைவீரர்கள், ரெயில் நிலைய நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக ரூ.5 லட்சம் செலவில் ‘செக்வே’ எனப்படும் 6 நவீன வாகனங்களை ஜான் தாமஸ் தொடங்கி வைத்தார். அந்த வாகனத்தில் நடைமேடைகளில் ரெயில்வே பாதுகாப்புபடையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

இதன் மூலம் அவசர கால நேரங்களில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் விரைந்து செயல்பட்டு, பயணிகளுக்கு உதவ முடியும். இந்த வாகனம் மணிக்கு 14 கி.மீ வேகத்தில் இயங்கும். இதில் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 கி.மீ வரை செல்லலாம். விரைவில் முக்கிய ரெயில் நிலையங்களில் இந்த நவீன ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். சென்டிரல் ரெயில் நிலையத்தில் புதுப்பித்த பயணிகள் உதவியும் மையத்தை ஜான் தாமஸ் ஆய்வு செய்தார்.

தலைப்புச்செய்திகள்