Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாரதா சிட்பண்ட் ஊழல்: நீதிமன்றத்தில் சரணடைந்த போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு ஜாமீன்

அக்டோபர் 03, 2019 12:56

கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 3 வாரங்களாகத் தலைமறைவாக இருந்த நிலையில் ஆலிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

முன்னதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன் வழங்கிட அனுமதித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இன்று ஆலிப்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் சுபர்தா முகர்ஜி முன்னிலையில் இன்று போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் ஆஜரானார். அவருடன் அவரின் வழக்கறிஞர் கோபால் ஹல்தாரும் வந்திருந்தார். இருவர் ரூ.50 ஆயிரம் பிணைப் பத்திரம் அளித்ததையடுத்து ராஜீவ் குமார் ஜாமீன் பெற்றுச் சென்றார்.

ரூ.2,500 கோடி சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார் ஏராளமான ஆவணங்களை அழித்துவிட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்தபோது ராஜீவ் குமார் ஆஜராகாமல் நீதிமன்றத்தின் உதவியுடன் தவிர்த்து வந்தார்.

ஆனால், நீதிமன்றம் ராஜீவ் குமாரைக் கைது செய்யத் தடையில்லை என்று தெரிவித்த நிலையில் ராஜீவ் குமார் திடீரென தலைமறைவானார். இவரை நேரில் ஆஜராகக் கூறி பல முறை சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் வரவில்லை. ஏறக்குறைய 3 வாரங்களுக்கும் மேலாக ராஜீவ் குமார் எங்கிருந்தார் என்ற விவரத்தை சிபிஐயால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சூழலில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் ராஜீவ் குமார் சார்பில் மீண்டும் ஜாமீன் மனுத்தாக்கல் தாக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் காவலில் விசாரணைக்கு எடுக்கும் அளவுக்கு தகுந்த வழக்கு இது இல்லை எனக் கூறி ஜாமீன் வழங்க உத்தரவிட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ராஜீவ்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுச் சென்றார்.

தலைப்புச்செய்திகள்