Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 15 இடங்களில் சுத்தமான தெரு உணவு மையம் அமைகிறது: பாரம்பரிய உணவுகளின் தரத்தை மேம்படுத்த ஏற்பாடு

அக்டோபர் 05, 2019 06:00

மதுரை: தமிழகத்தில் 15 இடங்களில் சுத்தமான தெரு உணவு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியே உணவுப் பாரம்பரியம் இருக்கிறது. வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள், முதலில் அந்த ஊர்களின் பாரம்பரிய உணவுகளைத்தான் சாப்பிட விரும்புவர். ஆனால், அவர்களுக்கு அந்த உணவு தரமாக கிடைப்பதில்லை.

உள்ளூர் மக்களுக்கு அந்த ஊரின் பாரம்பரிய உணவு எங்கு, எந்த நேரத்தில் கிடைக்கும் என்பது தெரியும். அந்த பாரம்பரிய உணவுகள் ஒரே இடத்தில் சுகாதாரமாகவும், நியாயமான விலையில் கிடைத்தால் வெளியூர்களில் இருந்து வருவோர் மகிழ்ச்சி அடைவர். 

அதன் மூலம் அந்த ஊரின் சுற்றுலாவும், உணவு தயாரிப்பு தொழிலும் வளர்ச்சி அடையும். அதற்காக, தமிழகத்தில் 15 நகரங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் (எப்எஸ்எஸ்ஏஐ) சார்பில், ஒரு குறிப்பிட்ட சாலை அல்லது தெரு தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள ஹோட்டல்கள், உணவுப் பொருள் அங்காடி, பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து, அந்த ஊரின் உணவு வகைகளை சுகாதாரமாக தயாரித்து வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. 

இந்தத் தெரு அல்லது சாலைகளுக்கு ‘சுத்தமான தெரு உணவு மையம்’ (clean street food hub) என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது. மதுரையில் மாட்டுத்தாவணி பகுதி, ‘சுத்தமான தெரு உணவு மையம்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சோமசுந்தரம் கூறியதாவது: 

தமிழகத்தில் ‘சுத்தமான தெரு உணவு மையம்’ மதுரை, சேலம், ஏலகிரி, ஏற்காடு, சென்னை, கோவை, குற்றாலம், ஊட்டி உள்ளிட்ட 15 இடங்களில் அமைக்கப்படுகின்றன. உணவு பாதுகாப்புத் துறையால் அடையாளப்படுத்தப்படும் இந்த தெரு அல்லது சாலைகளில் உள்ள தள்ளுவண்டி ஹோட்டல்கள், பெரிய மற்றும் சிறிய ஹோட்டல்கள், உணவுப் பொருள் அங்காடிகள் முறையாக லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் உணவுகள் எந்தவொரு ரசாயனமோ, கலப்படமோ இல்லாமல் சுத்தமாகத் தயாரித்திருக்க வேண்டும்.

அதை உணவு பாதுகாப்புத்துறை, அவ்வப்போது பரிசோதனை செய்து சான்று அளிக்கும். இந்த ஹோட்டல்களின் ஊழியர்களுக்கு உணவுகளை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். இந்தச் சாலையில் உள்ள உணவகங்கள் தரத்திலும்,சுகாதாரத்திலும் சிறப்பாக இருக்க உணவு பாதுகாப்புத்துறை தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளும்.

இங்கு விற்கப்படும் உணவுகள், மக்களின் சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும், பாதுகாப்பு தரத்தையும் உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்