Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை மத்திய அமைச்சர் வெளியிட்டார்

அக்டோபர் 06, 2019 05:04

புதுடெல்லி: வரும் 27ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஒரு சில மாற்றங்களை செய்து கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி சில நிபந்தனைகளுடன் கூடிய தீர்ப்பை வழங்கியது. 

அதில் குறிப்பாக பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. ஆனால் பேரியம் ரசாயனம் இல்லாமல் பட்டாசு தயாரிக்கவே முடியாது என ‘பெசோ’ சங்கத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், “பசுமை பட்டாசு என்றால் என்ன? அதற்கான வரையறை என்ன? மேலும், பேரியம் மற்றும் பொட்டாசியம் இல்லாமல் எப்படி அதனை தயாரிப்பது?, இந்த விவகாரத்தில் பெசோ மற்றும் நீரி அமைப்பால் தயாரிக்கப்படும் பட்டாசை முழுமையான சோதனைக்கு உட்படுத்தி பின்னர் அது தொடர்பான புதிய விதிமுறை மற்றும் வரையறைகளை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது.

வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக டெல்லியில் உள்ள அனுசந்தன் பவனில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பசுமை பட்டாசுகளை நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தற்போது பசுமைப் பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை நாட்டு மக்கள் வரும் தீபாவளி பண்டிகையின்போது வெடித்து மகிழலாம். புதிய வரையறை மூலம் முதல் முறையாக இந்த பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் சங்குச் சக்கரம், சாட்டை, கம்பி மத்தாப்பு, சிறிய அணுகுண்டு ஆகிய வகைகள் முதலாவதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாசு ஏற்படாது. 

இத்தகைய பசுமை பட்டாசை தமிழகத்தின் சிவகாசியை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்துள்ளன. மேலும் இந்த வகை பட்டாசால் கண் எரிச்சல், சுவாச கோளாறு ஆகிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. பட்டாசு வெடிக்கும்போது காற்று மாசு 30 சதவீதம் வரை குறையும். பசுமைப் பட்டாசுகள் மீது அதற்கான குறியீடு இருக்கும். இதைத்தவிர இவ்வகை பட்டாசுகளை தயாரிப்பதற்காக மேலும் கூடுதலாக 230 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்