Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வயதான தம்பதியை கொலை செய்த வழக்கு: ஆந்திர கணவன்-மனைவி கைது

அக்டோபர் 06, 2019 05:45

சென்னை: சென்னை ஆவடியை அடுத்த ஐயப்பன் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 67). இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அரசு அச்சகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுகுமாரி (65) கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெகதீசன் தனது மனைவி சுகுமாரியை பிரிந்து சென்று அவருடன் அரசு அச்சகத்தில் பணிபுரிந்த விலாசினி (58) என்பவரை திருமணம் செய்து தனியாக ஆவடி அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.

இவர்களுக்கு உதவியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை குடும்பத்துடன் வீட்டுக்கு பக்கத்திலேயே வீடு ஒன்றை கட்டி அதில் குடிவைத்து, வீட்டு தோட்டத்தை பராமரிக்கவும் வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 27-ந் தேதி அன்று காலை சந்திரசேகர் என்பவர் வந்து பார்த்த போது, வீட்டுக்குள் ஜெகதீசன் மற்றும் விலாசினி ஆகிய இருவரும் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் அவரது வீட்டில் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதும் தெரிந்தது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அங்கு கொலைக்கு பயன்படுத்திய சுமார் 3 அடி நீளமுள்ள இரும்பு குழாயை மட்டும் போலீசார் மீட்டனர்.

5 முறை தனிப்படை போலீசார் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் கொலையாளியை தேடி சென்று அவர்களை பிடிக்காமலேயே சென்னை திரும்பினர். இதையடுத்து 6-வது முறையாக ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த 2-ந் தேதி ஆந்திரா சென்றனர். அங்கு சுரேஷ் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

அங்கு போலீசார் சில செல்போன் எண்களை கண்டெடுத்தனர். அதை வைத்து போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது அதில் பேசிய நபர் தான் ஹரித்துவாரில் ஆட்டோ ஓட்டுவதாகவும், அப்போது சுரேஷ் என்பவர் தன்னுடைய போனை வாங்கி பேசியதாகவும் போலீசாரிடம் அந்த நபர் கூறியுள்ளார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் மாறு வேடத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்றனர். அங்கு சாலையில் ஆட்டோவை ஓட்டி சென்ற சுரேசை கண்டுபிடித்தனர்.

உடனே தனிப்படை போலீசார் சுரேசை நேற்று முன்தினம் காலை கைது செய்தனர். சுரேஷ் ஹரித்துவாரில் வாடகை வீட்டில் மனைவி மகனுடன் தங்கி வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தது தெரிந்தது. இதையடுத்து சுரேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்து அங்கிருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை சென்னைக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து சுரேஷிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த ஜெகதீசன் சுரேசிடம் தகராறு செய்து வீட்டை காலி செய்ய சொன்னதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் அங்கிருந்த இரும்பு குழாயால் ஜெகதீசன், விலாசினி ஆகிய இருவரையும் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்ததாகவும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இயைடுத்து ஆவடி போலீசார் சுரேஷ்குமார் (28) மற்றும் அவரது மனைவி பூவலட்சுமி (22) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர்களது மகன் சதீஷ் (3) சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

தலைப்புச்செய்திகள்