Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண் அதிகாரியை மிரட்டிய எம்.எல்.ஏ.கைது: ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை

அக்டோபர் 06, 2019 01:37

நகரி: ஆந்திர மாநிலம் நெல்லூர் ரூரல் தொகுதியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஸ்ரீதர்ரெட்டி.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வான இவர் மீது மண்டல வளர்ச்சி அதிகாரி சரளா என்பவர் நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனி நபர் ஒருவருக்கு குடிநீர் இணைப்பு வழங்க தாமதம் ஆனதாக கூறி ஸ்ரீதர்ரெட்டி என்னிடம் செல்போனில் பேசி மிரட்டினார். மேலும் எனது வீட்டிற்கும் வந்து குடும்பத்தினரையும் மிரட்டினார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ் பெக்டர் இல்லாததால் அவரின் புகாரை வாங்க போலீசார் மறுத்துவிட்டனர். ஆனால் சரளா தான் சப்- இன்ஸ்பெக்டர் வரும் வரை காத்திருப்பதாக கூறி அங்கேயே அமர்ந்து கொண்டார்.

இந்த செய்தி டி.வி. சேனல்களில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உடனே டி.ஜி.பி., கலெக்டரை தொடர்பு கொண்டு விசாரிக்கும்படி கூறினார். இதையடுத்து டி.ஜி.பி. சம்பவ இடத்துக்கு சென்று பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் எம்.எல்.ஏ. மிரட்டியது குறித்து தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள் என்று ஜெகன்மோகன்ரெட்டி உத்தரவிட்டார். இதனால் பெண் அதிகாரியை மிரட்டிய ஸ்ரீதர்ரெட்டி எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். பின்னர் சொந்த பிணையில் வெளிவந்தார்,

தலைப்புச்செய்திகள்