Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேகமாக பரவும் டெங்கு: சென்னையில் 500 பேர் அட்மிட், 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு

அக்டோபர் 07, 2019 11:45

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில் சென்னையில் 500 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் மழை காலத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சல் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. 

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகளில் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. சென்னையிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் 500க்கும் அதிகமானோர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 390 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இதை தவிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு, மர்ம காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுகாதாரத்துறை, பிற அரசு துறைகளுடன் இணைந்து டெங்கு தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில். காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்