Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

49 திரைப்பிரபலங்கள் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பாரதிராஜா, கமல்ஹாசன் வேண்டுகோள்

அக்டோபர் 08, 2019 02:04

சென்னை: 49 திரைப்பிரபலங்கள் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று, இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர் மணிரத்னம், அனுராக் கஷ்யப், ஷியாம் பெனேகல், ராமச்சந்திர குஹா, அபர்னா சென், சௌமித்ரா சாட்டர்ஜி உள்ளிட்ட 49 முக்கிய திரை பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். 

இந்நிலையில், திரைப்பிரபலங்கள் தாங்கள் எழுதிய கடிதத்தின் மூலம், நாட்டின் பிம்பத்துக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும், பிரதமரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டி பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காவல்நிலையத்தில் இந்த பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன்

இவ்விகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், இணக்கமான இந்தியாவையே பிரதமர் விரும்புகிறார். நாடாளுமன்றத்தில் அவரது அறிக்கைகள் அதை உறுதி செய்கின்றன. அதை மாநிலங்களும் அதன் சட்டங்களும் பின்பற்ற வேண்டாமா? பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக என் சக கலைஞர்கள் 49 பேர் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். நம் உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வண்ணம், பீகாரில் பதியப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஒரு குடிமகனாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார். 

பாரதிராஜா 

49 பேர் மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு இயக்குனர் பாரதிராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், அரசை விமர்சிப்பதால் ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதையும், கடிதம் எழுதியதற்காக தேசவிரோத வழக்குப்பதிவு செய்வதையும் ஏற்க முடியாது. கலைஞர்கள் தங்கள் கருத்துகளை பொது வெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவது சரியல்ல. அத்துடன் மாற்று கருத்துடையவர்களை பொய் வழக்குகள் மூலம் மவுனமாக்க முயல்வது ஏற்கத்தக்கது அல்ல. எனவே 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்