Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவடியில் தாய்-3 வயது மகள் கொலை

ஜனவரி 16, 2019 09:32

திருநின்றவூர்: ஆவடி நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் அருண்பாண்டியன். ஊசி மணி, பாசி மணி மற்றும் பொம்மை பொருட்களை ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (வயது 22). இவர்களது 3 வயது மகள் சுஜாதா. 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருண்பாண்டியன் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் சென்று விட்டார். வீட்டில் ரோஜாவும், அவரது மகள் சுஜாதாவும் இருந்தனர். 

இந்த நிலையில் இன்று காலை அவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தனர். 

அப்போது வீட்டில் உள்ள அறையில் ரோஜாவும், சுஜாதாவும் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

கொலையுண்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. 

வெளியூர் சென்றுள்ள அருண்பாண்டியனுக்கு, மனைவியும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்தவுடன் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 

முன் விரோதத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அருண்பாண்டியன் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னரே இது பற்றிய விவரம் தெரிய வரும். மேலும் சந்தேகத்திற்கிடமான 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்