Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 116 பவுன் நகைகள் கொள்ளை: 2 டிரைவர்கள் கைது

அக்டோபர் 11, 2019 06:52

சென்னை: நுங்கம்பாக்கம் காம்தார் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த வங்கி அதிகாரி விஸ்வநாதன் வீட்டில் கடந்த 6-ந்தேதி 116 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் உத்தரவிட்டனர். இணை கமி‌ஷனர் சுதாகர், துணை கமி‌ஷனர் சுகுனாசிங் ஆகியோரது மேற்பார்வையில், நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசிக்கும் டாக்டர் ஒருவரிடம் டிரைவராக பணியாற்றி வரும் சந்தானராஜ் என்பவர் தனது நண்பர் அரவிந்துடன் சேர்ந்து 116 பவுன் நகையை திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளையடித்த நகைகளை சந்தானராஜ் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அறையில் வைத்திருந்தார். அங்கு சென்று போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அப்போது 118 பவுன் நகைகள் இருந்தது. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வீட்டுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது டிரைவர் சந்தானராஜ் நள்ளிரவு 11.30 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளை போவதற்கு 3 நாட்களுக்கு முன்பே விடுமுறை எடுத்துவிட்டு சென்ற அவர் எதற்காக நள்ளிரவில் வந்து சென்றார்? என்று போலீசார் சந்தேகப்பட்டனர். இதன்பிறகே விசாரணை நடத்தி துப்பு துலக்கினர்.

சந்தானராஜுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் அரவிந்த் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவரிடம் டிரைவராக பணியாற்றி வந்தார். 2 பேரும் காயல்பட்டினத்தை சேர்ந்தவர்கள். சென்னையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.

கொள்ளையடித்த பிறகு நகைகளை சென்னையில் உள்ள தங்கள் அறையில் வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருவரும் காயல்பட்டினத்துக்கு சென்றுவிட்டனர். அங்கு சென்றுதான் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்