Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிக்கு 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த முதியவர்

அக்டோபர் 11, 2019 08:12

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி பலரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.  

தூத்துக்குடி மாவட்டம் மேலகரந்தையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 310 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஒன்று முதல் 8ம் வகுப்புவரை மட்டுமே உள்ள அந்த பள்ளியில் படித்த மாணவர்கள், மேற்படிப்பை தொடர சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்ல வேண்டும்.

அதன் காரணமாக கிராமத்தினர் நடுநிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால்,போதிய இடம் வசதி இல்லாததால் பள்ளியை தரம் உயர்த்த முடியாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை அறிந்த சீனிவாசன் என்ற முதியவர், பள்ளிக்கு அருகே உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது நிலத்தை தானமாக கொடுத்ததுடன், அதற்கான ஒப்புதல் கடிதத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்தாக கூறும் சீனிவாசன், விரைவில் நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

போதிய நிலத்தை முதியவர் தானமாக கொடுத்துள்ளதால், மாணவர்களின் நலன் கருதி விரைவில் நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என அப்பகுதி மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்