Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை சோதனை: ரூ.30 கோடி பறிமுதல்

அக்டோபர் 12, 2019 02:38

சென்னை: நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, டாக்டர் வெங்கடேசன், முகமது ஷபி, மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் விசாரணை நடத்தினார். அப்போது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் 14-ம் தேதி நடை பெறும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் நாமக்கல், கரூர், பெருந்துறை, சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள், வீடு மற்றும் நீட் பயிற்சி யைங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.30  கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் தனியார் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், பள்ளி ஆடிட்டோரியத்தில் அசையா சொத்துகளின் ஆவணங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பயிற்சி மையங்களில் அதிக ஊதியத்திற்கு ஆசிரியர்களை பணிக்கு நியமித்து உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்