Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு லஞ்சம் கொடுத்த தனியார் மருத்துவமனை

அக்டோபர் 16, 2019 11:46


சென்னை: ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இதன் மூலம் புற்றுநோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்கள், விபத்து மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவைகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். விபத்தில் சிக்கி காயம் அடைபவர்கள் அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை, தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விபத்தில் படுகாயம் அடைபவர்களை அரசு மருத்துவமனையில் சேர்க்காமல் பெரும்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான குளோபல் மருத்துவமனையில்  சேர்த்ததாக புகார்கள் வந்தன.

இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.

அப்போது முதல்-அமைச்சரின் காப்பீடு தொகை பெறுவதற்காக விபத்தில் சிக்கியவர்களை குளோபல் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்க அதன் நிர்வாகம் 108 ஆம்புலன்சு டிரைவர்கள் மற்றும் அதில் பணிபுரியும் மருத்துவம் சார்ந்த ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சு சேவையை தவறாக பயன்படுத்தியதாக தமிழக முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து குளோபல் மருத்துவமனையை தற்காலிகமாக ரத்து (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 108 ஆம்புலன்சு சேவையில் பணியாற்றிய 19 பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தலைப்புச்செய்திகள்