Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிரியாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அகதிகளாக வெளியேற்றம்

அக்டோபர் 16, 2019 01:50

சிரியா: சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிய பின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடிய குர்திஷ் இனப் போராளிகள் மீது துருக்கி ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. தனி நாடு கேட்கும் குர்திஷ் இன மக்கள் தங்கள் நாட்டிலும், எல்லையிலும் இருப்பதை ஆபத்தாக துருக்கி அதிபர் எர்டோகன் கருதுவதே இந்த தாக்குதலுக்குக் காரணமாகியுள்ளது.  

சிரியாவின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கியின் தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். தாக்குதலில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுவதும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காட்சிகளும் காண்போர் நெஞ்சை பதற வகையில் உள்ளது.

மேலும், பசியால் வாடும் மக்கள் உணவுக்காக வீதிகளில் கூட்டம் கூட்டமாக கையேந்தி நிற்பதும் குப்பை மேடுகளில் அலைந்து திரிந்து ரொட்டித்துண்டுகளை பொறுக்கி குழந்தைகள் பசியை போக்கிக்கொள்ளும் காட்சிகளும் சிரியாவின் அவல நிலையை தோலுரித்து காட்டுகிறது.

துருக்கி ராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி இதுவரை வடக்கு சிரியாவில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர். அவர்களின் 70 ஆயிரம் குழந்தைகள் வீடுகளை இழந்து அகதிகளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

துருக்கியின் இந்த மனிதத்தன்மையற்ற தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

துருக்கி அழிவு பாதையை தேர்வு செய்துள்ளதால் அந்நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்க உள்ளதாக கூறி அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்து கடுமை காட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால், துருக்கி அதிபர் டயிப் எர்டோகனோ, வடக்கு சிரியாவில் நடக்கும் தாக்குதலை ஒருபோதும் நிறுத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் பொருளாதார தடையை சந்திக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். துருக்கியின் இந்த முடிவால், குர்திஷ் போராளிகளின் பிடியில் சிறையில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தப்பிவந்து உலகம் முழுவதும் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்