Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலெக்டரின் பேச்சுக்கு எதிர்ப்பு: கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்த அதிகாரிகள்

அக்டோபர் 21, 2019 05:13

திருவண்ணாமலை: பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் வீடு கட்டுவதற்கான ஆணையை இன்று வழங்கவில்லை என்றால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களை சஸ்பெண்டு செய்து விடுவேன் என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி வாட்ஸ்-அப்பில் எச்சரித்து தகவல் அனுப்பினார்.

இந்த வாட்ஸ்-அப் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருவண்ணாமலையில் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் பாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் பொருளாதார கணக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பலர் இந்த திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தில் வீடு கட்டி முடிக்க முடியவில்லை என்று இந்த திட்டத்தை ஏற்க மறுக்கின்றனர். சிலர் அஸ்திவாரம் போட்ட பின்கூட வீடு கட்ட பணம் எடுக்க முடியவில்லை என்று திட்டத்தை வேண்டாம் என்று கூறுகின்றனர்.

இந்த திட்டத்தில் சாதனை புரிய வேண்டும் என்ற மத்திய, மாநில அரசின் செயல்பாட்டால் ஏற்படும் பிரச்சனையாகும்.

கலெக்டரின் இந்த செயல்பாட்டை கண்டித்து இன்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்வது என்றும், நாளை மறுநாள் அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலங்கள் முன்பு இந்த திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடத்தப்பட உள்ளது.

மேலும் 25-ந்தேதி சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் முறையிடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

கலெக்டரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.

தலைப்புச்செய்திகள்