Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

அக்டோபர் 22, 2019 07:22

புதுடெல்லி : சிபிஐ கைது செய்துள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. .வெளிநாடு செல்லக்கூடாது என்கிற நிபந்தனையுடன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிபிஐயால் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு பிறகு ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு ஜாமீன் வழங்கியுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு 

கடந்த 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவர் மீதும் சிபிஐ.யும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் 

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர் சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு,  உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்கள் கடந்த வாரம் முடிவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு 

# வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. 
# ரூ. 1 லட்சம் பிணைத் தொகை செலுத்த உத்தரவிடப்பட்டது. 
# விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். 

சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை

இதனிடையே சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரத்தால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது நிலை உள்ளது. 7 நாள் காவலில் தனது அலுவலகத்தில் வைத்து ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறை காவல் 24ல் முடியும் நிலையில், அன்றைய தினம் குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்க உள்ளது. முன்னதாக ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கடந்த 18ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. 

தலைப்புச்செய்திகள்