Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்கி ஆசிரமத்தில் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு

அக்டோபர் 22, 2019 07:55

சென்னை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வரதப்பாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள நத்தம் என்ற ஊரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.

இந்த ஆசிரமத்துக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏராளமான கிளைகள் உள்ளன. அதுபோல அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா மற்றும் வளைகுடா நாடுகளிலும் கல்கி ஆசிரமத்துக்கு கிளைகள் இருக்கின்றன.

வெல்னஸ் குழுமம் என்ற பெயரில் கல்வி ஆசிரமம் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது. குறிப்பாக கட்டுமான துறையில் பல நூறு கோடி ரூபாய்களை கல்கி ஆசிரமம் முதலீடு செய்துள்ளது. வெளிநாடுகளிலும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர கோல்டன் லோட்டஸ், ட்ரீம் வியூ, ப்ளு வாட்டர் ஆகிய பெயர்களிலும் கல்கி ஆசிரமம் நிலங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த வகையில் கல்கி ஆசிரமத்திற்கு சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

அந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். கல்கி ஆசிரமம் சுமார் 25 நாடுகளில் பினாமி பெயர்களில் ஓட்டல்கள், மால்கள், பண்ணை வீடுகள் வைத்திருப்பது தெரிய வந்தது. கல்கி ஆசிரமத்திற்கு வேறு பெயர்களில் கப்பல்களும், சிறிய ரக விமானமும் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல்களை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 16-ந்தேதி கல்கி ஆசிரமத்திலும், அதன் கிளைகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளும், நேரடி வரி விதிப்பு துறையின் செய்தி தொடர்பாளர் சுரபி அலுவாலியாவும் கூறியதாவது:-

கல்கி ஆசிரமங்களில் நடந்த சோதனையில் ரூ.800 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல கணக்கில் வராத ரூ.65 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.45 கோடி இந்திய பணமாகும். மீதமுள்ளவை அமெரிக்க டாலர்களாக உள்ளன.

மேலும் ரூ.28 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் ஹவாலா முறையில் பணபரிமாற்றம் நடந்து ரூ.100 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கல்கி ஆசிரமம் வரி ஏய்ப்பு செய்து இருப்பதற்கு உரிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை ஆராயப்பட்டு வருகின்றன. பினாமி பெயர்களில் நிலம் வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 19 வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கல்கி அறக்கட்டளையின் வரவு-செலவு கணக்குகள், நன்கொடை வரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 24 வெளிநாடுகளில் இருந்து பணம் வந்துள்ளது. அது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு சுரபி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைப்புச்செய்திகள்