Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநகர பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவருக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை

அக்டோபர் 23, 2019 12:28

சென்னை: சென்னை மாநகர பேருந்தில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் சட்டக்கல்லூரி மாணவருக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் கல்வி ஆண்டு தொடங்கிய நாள் அன்று அரசு பேருந்து மீது ஏறி கூச்சல் எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக துரைராஜ் உள்ளிட்ட மாணவர்கள் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவர் துரைராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில் தாம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படித்து வருவதாகவும் ஆனால்  பச்சையப்பன் கல்லூரி மாணவன் என வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டக் கல்லூரி மாணவரான மனுதாரர் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார் என்றாலும் அவரது எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் படிக்கும் சட்டக்கல்லூரி வளாகத்தில் 10 மரக்கன்றுகளை நட்டு ஒரு மாதத்திற்கு தண்ணீர் ஊற்றி அவற்றை பராமரிக்க வேண்டும்.

பராமரிப்பு குறித்து ஒவ்வொரு மாதமும் கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து துரைராஜ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 

தலைப்புச்செய்திகள்