Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெச்.ராஜாவுக்கு நன்றி தெரிவிக்கும் காரப்பன்

அக்டோபர் 23, 2019 12:46

கோவை: ஹெச்.ராஜாவும், இந்துத்வ அமைப்புகளும் செய்த விளம்பரத்தால் சிறுமுகையில் விற்பனை அதிகரித்துள்ளதாக காரப்பன் சில்க்ஸ் நிறுவனர் காரப்பன் தெரிவித்துள்ளார்.

சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் நிறுவனரும், தேசிய கைத்தறி நெசவு பயிற்சியாளருமான காரப்பன், கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு கருத்தரங்கில் இந்துக் கடவுள்கள் குறித்துப் பேசிய கருத்து கடுமையான விவாதத்திற்குள்ளானது.

இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகள் காரப்பனுக்கு எதிராக போஸ்டர் அடித்து ஊர்முழுக்க ஒட்டினர். காரப்பன் சில்க்ஸ் கடையில் இந்துக்கள் யாரும் துணிவாங்க வேண்டாம் என்கிற ரீதியில் பரப்புரை மேற்கொண்டனர். இதையடுத்து, காரப்பன், இந்துக்களை புண்படுத்திய தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஆனால், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது என சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தமிழகம் முழுக்க தீயாகப் பரவியது. பா.ஜ.க-வினரின் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வெளியூர்களைச் சேர்ந்த பலரும் காரப்பன் சில்க்ஸ் நிறுவனத்துக்குச் சென்று துணிவாங்க வேண்டும் என தமது விருப்பத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 

இதுகுறித்து ஊடக நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள காரப்பன், “அறிமுகம் இல்லாதவர்கள் கூட எனக்கு ஆதரவு தெரிவிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆயிரங்களில் நடந்துகொண்டிருந்த வியாபாரம், இப்போது லட்சங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

சிறுமுகையில் உள்ள அனைத்துக் கடைகளிலுமே வியாபாரம் அதிகரித்துள்ளது. பட்டுப்புடவை தயாரிப்பில் காஞ்சிபுரம், ஆரணிக்கு அடுத்து சிறுமுகை மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த விவகாரத்துக்குப் பிறகு சிறுமுகை முதல் இடத்துக்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்