Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் முழுவதும் நாளை முதல் டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தம்

அக்டோபர் 24, 2019 05:22

சென்னை: நான்கு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதால் நாளை முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அரசு டாக்டர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 29ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் இதுவரை கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. 

அதனால் மீண்டும் டாக்டர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், நேற்று அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலும் போராட்ட ஆயத்த கூட்டம் நடத்தினர். இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில், திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கும் என்று டாக்டர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். 

நாளை நடைபெறும் போராட்டத்தின்போதும், அவசர சிகிச்சைப்பிரிவு தீவிர சிகிச்சைப்பிரிவு, காய்ச்சல் வார்டில் பணியாற்றும் டாக்டர்கள் பணியை புறக்கணிக்க மாட்டார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அவசர சிகிச்சைப்பிரிவு தீவிர சிகிச்சைப்பிரிவு, காய்ச்சல் வார்டில் பணியாற்றும் டாக்டர்களும் பணியை புறக்கணித்து பேராட்டத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் நேற்று ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை வளாகத்தில் கோரிக்கை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் தீபாவளி முக்கிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் அரசு டாக்டர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதால் அரசு மருத்துவமனைகள் முடங்கும் சூழல் ஏற்படும். தீபாவளி பண்டிகை என்று இல்லை, அக்டோபர் 25ம் தேதி போராட்டம் என்பது ஏற்கனவே திட்டமிட்டது. அதனால்தான் அவசர சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு, காய்ச்சல் வார்டுகளில் டாக்டர்கள் பணியை புறக்கணிக்கப்போவதில்லை என்றனர்.

தலைப்புச்செய்திகள்