Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது தாயுடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படம்

அக்டோபர் 27, 2019 04:04

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பரிசுப்பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஏலத்தில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிட பிரதமர் முன்வந்தார்.
 
இதைத்தொடர்ந்து அந்த பொருட்களின் கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை மத்திய கலாசார அமைச்சகம் டெல்லியில் நடத்தியது. இதில் மொத்தம் 2,772 பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. அவை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

கடந்த மாதம் 14-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை இந்த ஏலம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இது மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட அனைத்து பொருட்களும் ஏலம் போயின. இதைத்தொடர்ந்து இந்த ஏலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த கண்காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்களுக்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த இந்த ஏலத்தில் பல்வேறு நடிகர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பொருட்களை வாங்கினர்.

இதனால் பரிசுப்பொருட்கள் அனைத்தும் அதிக விலைக்கு ஏலம் போயின. இதில் அதிகபட்சமாக, தேசிய கொடி பின்னணியில் மகாத்மா காந்தியுடன் பிரதமர் மோடி இருப்பது போன்று வரையப்பட்ட ஓவியம் ஒன்று ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது. பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியிடம் ஆசிபெறும் புகைப்படம் ஒன்று ரூ.20 லட்சத்துக்கு விற்பனையானது. மேலும் மணிப்பூரி நாட்டுப்புறக்கலையை பிரதிபலிக்கும் படம் ரூ.10 லட்சத்துக்கும், உலோகத்தால் ஆன பசு-கன்று சிற்பம் ஒன்று ரூ.10 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டன.

தலைப்புச்செய்திகள்