Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகிழ்ச்சியும், இனிமையும் நிலைக்கட்டும்: தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

அக்டோபர் 27, 2019 04:12

சென்னை: தலைவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

கவர்னர் பன்வாரிலால் புரோகி: மங்களகரமான திருநாளில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திருநாள் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வளமையையும் கொண்டுவந்து ஒவ்வொருவரின் வாழ்விலும் நிலை பெற்றிருக்க வாழ்த்துகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரே சமயப் பண்டிகை. இந்து, சமண, சீக்கிய சமயத்தார் வெவ்வேறு காரணங்களுக்காக இந்நாளை கொண்டாடினாலும் இந்தியா முழுவதும் கொண்டாடும் ஒரே பண்டிகை இதுதான். இத்திருநாளில் ஏற்றப்படும் தீப ஒளி விளக்குகளால் உருவாகும் ஒளியானது எவ்வாறு இருளை அகற்றுகிறதோ, அதேபோன்று மக்களின் மனங்களிலும், வாழ்விலும் ஒளிவீசி மகிழ்வோடு வாழ தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது: தீபஒளித் திருநாள் மத்தாப்புகளால் ஏற்படுத்தப்படும் வண்ணங்களையும், ஒளிகளையும் மட்டும் கொண்டதாக இருக்கக் கூடாது. மாறாக, மக்களின் வாழ்க்கையில் இல்லாமையை விலக்கி, இன்பத்தைப் பெருக்கி வளமும், நலமும் கொண்டதாக மாற வேண்டும். அத்தகைய ஒளி மயமான இலக்கை நோக்கி உழைக்க நாம் அனைவரும் ஒளிகளின் விழாவான இந்த நன்னாளில் உறுதியேற்றுக்கொள்ள வேண்டும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: வெகு சிறப்பாக தீபாவளி திருநாளை அவரவர் சக்திக்கு ஏற்ப அனைவரும் கொண்டாட வேண்டும். வரும் காலங்களில் தங்களின் வாழ்வில் செழிப்பும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்பட்டு மக்கள் அனைவரும் வளமான வாழ்வு வாழ, ஒளிமயமான எதிர்காலம் அமைந்திட, அனைத்து மக்களும் இன்பத்தையும், நிம்மதியையும் பெற்று தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன்: தீபாவளி பண்டிகையில் தீபம் ஏற்றும் போது இருள் நீங்கி ஒளி தருவது போல இந்திய நாட்டின் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் ஒளி ஏற்பட்டு வாழ்வாதாரம் சிறக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மக்களுக்கும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கும், உலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்: குடும்பத்தோடு குதூகலமாக எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ இறைவன் ஆசீர்வதிக்க பிரார்த்திக்கிறேன். தமிழை மூத்த மொழி என்று சொல்லி நமது மொழியை உயர்த்திக்காட்டி தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி, நாடுமுழுவதும் மகிழ்ச்சி ஒளி பரவட்டும்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: தர்மம் எப்போது வெல்லும் என்னும் தார்மீக உண்மையை மட்டுமல்லாது, வறுமை, அறியாமை, நோய்கள், வெறுப்பு என்று நம்மைப் பிடித்திருக்கும் இருள் விலகி, செழுமை, அறிவு, நல்ல உடல் நலன், அன்பு என்ற ஒளி பெருகி, அனைவரும் மகிழ்வுடனும், மன நிறைவுடனும் வாழ வேண்டும் என்பதே தீபாவளி பண்டிகை அடிப்படையில் நமக்கு உணர்த்துவதாகும். இந்த ஒரு நாள் மகிழ்ச்சி என்பது ஆண்டு முழுவதும் நிறைந்திருக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அதர்மம் எப்போதும் நிலைத்ததில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் இந்த நன்னாளில் தீமைகள் அனைத்தும் விலகி, நன்மைகள் உயர்ந்து சிறக்கட்டும். ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்திருக்கட்டும். தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் என்றைக்கும் நின்று ஒளிரட்டும்.

தலைப்புச்செய்திகள்