Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காதல் ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்ய முயற்சி: 2 பேர் கைது

அக்டோபர் 31, 2019 04:29

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ஜீவித் (வயது 26). புலிவலம் பகுதியைச் சேர்ந்தவர் இந்து (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் இருவரும் அண்ணா பல்கலைகழகத்தில் என்ஜீனியரிங் படித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்போது அடிக்கடி திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தில் இருவரும் தனிமையில் அமர்ந்து பேசுவது வழக்கம்.

நேற்று மாலை 3 மணிக்கு இருவரும் கொள்ளிடம் பழைய பாலத்தில் அமர்ந்து பேசியபோது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். காதல் ஜோடி நெருக்கமாகபேசுவதை வீடியோவில் படம் பிடித்தனர். இதை ஜீவித் தட்டிக்கேட்டார்.

உடனே நாங்கள் உங்கள் தனிமையை வீடியோ எடுத்துள்ளோம். அதை சமூக வலைதளங்களில் பரப்புவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். பின்னர் 2 பேரும் இந்துவிடமும் சில்மி‌ஷத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவித் அந்த வாலிபர்களிடம் தங்களை விட்டு விடும்படி கெஞ்சினார். ஆனால் அதையும் செல்போனில் படம் பிடித்த வாலிபர்கள் ஜீவித்தை தாக்க தொடங்கினர்.

உடனே இந்து அங்கிருந்து தப்பியோடி உதவிக்கு ஆட்களை அழைத்து வர ஓடினார். அதற்குள் அந்த வாலிபர்கள் காதலனை அடித்து ஆற்குக்குள் விசி எறிந்தனர். இதற்கிடையே இந்துவால் உதவிக்கு அழைத்து வரப்பட்டவர்கள் அந்த 2 வாலிபர்களையும் தர்மஅடி கொடுத்து கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் உத்தமர்கோவிலை சேர்ந்த கோகுல் (22), சமய புரம் தேவிமங்கலத்தை சேர்ந்த கலையரசன் (23) என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோகுலும், கலையரசனும் அந்த பகுதிக்கு அடிக்கடி மது குடிக்க செல்வார்கள். நேற்று மதியம் 3 மணிக்கு அங்கு சென்றபோது காதல் ஜோடியை பார்த்ததும் ஆசை ஏற்பட்டு அத்துமீறி உள்ளனர். இவர்கள் 2 பேரும் மீதும் போலீசார் 294 பி அவதூறாக பேசுதல், 323 தாக்குதல் நடத் துதல், பெண்ணை கொடு மைபடுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே வாலிபர்கள் தாக்குதலுக்குள்ளாகி கொள்ளிடம் ஆற்றுக்குள் வீசப்பட்ட கல்லூரி மாணவர் ஜீவித்தை மீட்க நேற்று இரவு 7 மணிவரை ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறை வீரர்கள் ரப்பர் படகில் சென்று தண்ணீரில் தேடினர். ஆனால் ஜூவித்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது கொள்ளிடம் 15,022 கனஅடிநீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஆழம் அதிகமாக உள்ளது. நேற்று இரவு ஆகிவிட்டதால் போதிய வெளிச்சம் இல்லை என்று தீயணைப்பு வீரர்கள் திரும்பி விட்டனர். இன்று காலை முதல் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று ரப்பர் படகு மூலம் தேடும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. ஆற்றுக்குள் வீசப்பட்ட மாணவர் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட வாலிபர்கள் ஜூவித் தானாக ஆற்றுக்குள் குதித்தார் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக ஜூவித்தின் காதலி இந்துவிடமும் விசாரணை நடந்து வருகிறது. 

தலைப்புச்செய்திகள்