Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

நவம்பர் 01, 2019 05:08

சென்னை: 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வந்த அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம், முதல்வர் மற்றும் அமைச்சரின் எச்சரிக்கையை தொடர்ந்து தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

சம்பள உயர்வு, காலமுறை பதவி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், ஏழு நாட்களாக, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், நோயாளிகள் அவதிப்பட்டனர். நோயாளிகள் நலன் கருதி, டாக்டர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் இ.பி.எஸ்., சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், கோரிக்கை நிறைவேறும் வகையில் போராட்டம் தொடரும் என டாக்டர்கள் பிடிவாதம் காட்டினர். 

இந்நிலையில், 'வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், பணிக்கு திரும்ப, இன்று காலை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரும், பணிக்கு திரும்பாதவர்கள் நீக்கம் செய்யப்பட்டு, புதிய டாக்டர்கள் நியமிக்கப்படுவர்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதி கெடு விதித்தார்.

இந்நிலையில், சென்னையில், அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் கூறுகையில், எங்களை கடவுளுக்கு இணையாக மக்கள் பார்ப்பதாக முதல்வர் கூறியதை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்கிறோம். எங்களின் போராட்டம் 8 வது நாளாக நீடிக்கும் என நினைக்கவில்லை என்றார். முதல்வர் மற்றும் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்