Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் மாண்டிசோரி கல்வி முறை 2 ஆண்டுகளுக்குள் அமல்

நவம்பர் 02, 2019 02:59

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மாண்டிசோரி கல்வி முறை அமல்படுத்தப்படும் என்று ஆணையர் பிரகாஷ்  தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைமுறைபடுத்தபட்டு வரும் மாண்டிசோரி கல்வி முறையை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கல்வி துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். 

இதனைத் தொடர்ந்து ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி:
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் உள்ளன. தற்போது 90 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முதல்வர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
 
மாநகராட்சி பள்ளிகளில் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக நல திட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே வரும் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழு அளவு மாணவர் சேர்க்கை எட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் கற்றுக் கொள்ளும் திறனுக்கு ஏற்ற வகையில் கல்வி கற்பிக்கும் மாண்டிசோரி கல்வி முறை தற்போது 22 சென்னை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும் என்பது விஞ்ஞான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த முறையை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் மாதத்திற்குள் 38 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து 2020 - 21 கல்வியாண்டில் மேலும் 100 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும்.  

அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து பள்ளிகளிலும் இந்த கல்வி முறையை நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 160 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். பள்ளிகளில் வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக டிஜிட்டல் முறையிலும் சமூக வலைதளம் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்