Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு பரிசு: கலெக்டர் சுப்பிரமணியன்

நவம்பர் 03, 2019 06:18

விழுப்புரம்: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் நமது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படவில்லை. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் சாதாரண காய்ச்சலால் 312 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஆனால் இந்த ஆண்டில் 181 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வரக்கூடிய 2, 3 மாதங்களில் கடுமையாக பணி செய்தால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க முடியும்.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 30 தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும். வீடுகளை சுற்றி தேவையில்லாமல் கிடக்கும் மண்பானைகள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் அப்புறப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கிராமங்களிலும் குப்பைகள் அதிகமாக கிடக்கிறது. ஆகவே கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்தி குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். கழிவுநீர் வடிகால் வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சிறிய குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும். கொசுக்களை ஒழிக்க மாலை 6 மணிக்கு மேல் அல்லது காலை 7 மணிக்கு முன்பாக கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

நமது மாவட்டத்தை பொறுத்தவரை 7 லட்சம் மாணவ- மாணவிகள் பள்ளிகளில் உள்ளனர். ஒவ்வொரு மாணவ- மாணவியும் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் மற்றும் அருகில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க முடியும். இந்த பணியில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். வாரந்தோறும் வியாழக்கிழமை பள்ளி வளாகத்தை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். அதுபோல் பள்ளி வளாகத்தில் இருக்கும் கழிவறையையும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.

அங்கன்வாடி மையங்களையும், அதன் சுற்றுப்புறங்களையும் தண்ணீர் தேங்காமல் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். அனைத்து ஓட்டல்களும் சுகாதாரமாக இருக்கிறதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலே இல்லாத சூழ்நிலையை உருவாக்க அனைத்து துறை அதிகாரிகளும் பாடுபட வேண்டும் என அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்