Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதிமுக, பாஜக தொண்டர்கள் மோதல்

மார்ச் 01, 2019 11:07

கன்னியாகுமரி: குமரி மாவட்ட மக்களுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று குமரி மாவட்டம் வந்தார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.  

முன்னதாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகை தந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இதர அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சால்வை அணிவித்தும் மலர் செண்டுகளை அளித்தும் வரவேற்றனர். 

இன்று தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நெல்லை-கன்னியாகுமரி மாவட்ட எல்லைப்பகுதியான காவல்கிணறு என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்றார். 

‘தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்த மோடியே... திரும்பிப்போ!’ என்ற வாசகம் கொண்ட பதாகைகளை கையிலேந்தியவாறு அவர்கள் கோஷமிட்டனர். பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது கருப்பு பலூன்களை வைகோ வானில் பறக்கவிட்டார். 

அப்போது, அங்கு திரண்டிருந்த மதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ பேசிக்கொண்டிருந்தபோது இருகட்சி தொண்டர்களும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதைதொடர்ந்து, அங்கு விரைந்துவந்த போலீசார், வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களை கைது செய்து, வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். 

தலைப்புச்செய்திகள்