Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது: அன்புமணி

நவம்பர் 04, 2019 05:57

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பா.ம.க. சார்பில் அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை மற்றும் மக்கள் படைகளின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பைசுஅள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் என்மீது அதிக பாசம் கொண்ட தம்பிகள், தங்கைகள் இருப்பது இந்த தர்மபுரி மாவட்டத்தில் தான். இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்களும், இளம் பெண்களும் 5 முதல் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து உங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்ல வேண்டும்.

தமிழகமும், தர்மபுரி மாவட்டமும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை நீங்கள் பெற வேண்டும். எனது தம்பி, தங்கைகளான நீங்கள் நினைத்தால் இதை செய்ய முடியும். தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினராக நான் இருந்த 5 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் மூலம் 7 நீர்பாசன திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு நீங்கள்தான் காரணம்.

தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு காவிரி ஆற்றின் உபரிநீரை கொண்டுவரும் திட்டம் குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்அமைச்சரை சந்தித்தபோது பேசி உள்ளேன். தர்மபுரி- மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டபணிகள் விரைவுபடுத்தப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்விக்கடன், நகைக்கடன், விவசாய கடன் ஆகியவற்றை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை, குறிப்பாக பெண் வாக்காளர்களை ஏமாற்றி விட்டார். இனி மக்கள் அவரை நம்பமாட்டார்கள் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

தலைப்புச்செய்திகள்