Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விழுப்புரம் அருகே நர்சு தனது 6 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

நவம்பர் 04, 2019 06:06

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ளது நேமூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 38). இவரது மனைவி சரசு(வயது 32). இவர்களுக்கு 6 வயதில் வைசாலி என்ற மகள் இருந்தாள். சரசு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரசு தனது வேலையில் விருப்ப ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் தனது கணவரை கவனித்து வந்தார். நோய் அதிகமானதால் கார்த்திக் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்ததால் சரசு மனவேதனை அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் பேசாமல் இருந்தார்.

கணவர் இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் சரசு தனது மகள் வைசாலியை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றுக்கு அழைத்து சென்றார். அதனைத்தொடர்ந்து தனது மனதை கல்லாக்கி கொண்டு மகள் வைசாலியை இறுக்கி கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் குதித்தார்.

சிறிது நேரத்தில் சரசுவும், வைசாலியும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் சரசுவும், அவரது மகள் வைசாலியும் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

இதற்கிடையே கிணற்றுக்குள் குதித்து தாய், மகள் இறந்த சம்பவம் கஞ்சனூர் போலீசுக்கு தெரியவந்தது. போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் பிணமாக மிதந்த தாய், மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்