Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போர்வெல் குழியில் விழுந்த அரியானா சிறுமி 10 மணி நேரத்தில் மீட்பு

நவம்பர் 04, 2019 11:11

சண்டிகர்: அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமியை, விடியவிடிய போராடி கிராம மக்களும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் மீட்டனர். அந்த சிறுமிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டம் ஹர்சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த சிவானி (5) என்ற சிறுமி நேற்று மாலை வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். 

திடீரென மாயமான சிறுமியை, அவரது பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினர். இருந்தாலும், சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் கர்நாலில் உள்ள திறந்தவெளி போர்வெல்லில் சிறுமி விழுந்த விவகாரம் இரவு 9 மணிக்கு பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வதற்கு முன்னதாக, உள்ளூர் மக்கள் ஒன்று சேர்ந்து போர்வெல்லுக்கு பக்கத்தில் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பள்ளம் தோண்டினர். மருத்துவக் குழுவினரும், அங்கு தயார் நிலையில் இருந்தனர். குழந்தை 20 அடி ஆழத்தில் விழுந்ததாக அறியப்பட்டது. நேரம் செல்ல செல்ல குழந்தை 50 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டது. 150 அடி ஆழத்தில் குழி இருந்ததால், குழந்தையை மீட்பது தொடர்பாக பெற்றோர் அச்சம் அடைந்தனர். 

இதற்கிடையே, செல்போனை குழிக்குள் கயிறுகட்டி இறக்கி, குழந்தையின் அழுகுரலை மீட்பு குழுவினர் கேட்டனர். உள்ளூர் மக்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டது. மாவட்ட எஸ்பி சுரேந்திர் சிங் தலைமையில், நள்ளிரவு முதல் மீட்புப்பணி நடைபெற்ற நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அவர்கள்  சிறுமிக்கு ஆக்ஸிஜன் வழங்கி துரித பணியை தீவிரப்படுத்தினர். ஒருவழியாக 10 மணி நேர போராட்டத்துக்கு பின், இன்று காலை 7 மணியளவில் போர்வெல் குழிக்குள் இருந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். உடனடியாக அந்த சிறுமிக்கு முதலுதவி வழங்கப்பட்டு, அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும், சிக்கலான நிலையில் சிறுமி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் குழந்தையை காப்பாற்றுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி  சுரேந்திர் சிங் கூறுகையில், ‘‘சிறுமி மீட்கப்பட்டார்; அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்