Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குற்றவாளியின் தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

நவம்பர் 07, 2019 03:14

புதுடெல்லி: கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு 11 வயது சிறுமி முஸ்கின், அவரது தம்பி ரித்திக் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்த தொழில் அதிபர் ரஞ்சித்குமார் ஜெயின்-சங்கீதா தம்பதியரின் இந்த 2 குழந்தைகளும் பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் கொன்று வீசப்பட்டிருந்தனர்.

5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி முஸ்கின், 3-ம் வகுப்பு படித்து வந்த அவளது தம்பி ரித்திக் இருவரும் கால்டாக்சியில் பள்ளிக்கு சென்று வந்தனர். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி வழக்கம்போல பள்ளிக்கு சென்றபோதுதான் காரில் கடத்தி கொலை செய்து ஆற்றில் வீசப்பட்டனர்.

11 வயதே நிரம்பிய சிறுமி முஸ்கின் ஈவு இரக்கமின்றி கற்பழித்து கொலை செய்யப்பட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரது கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. சிறுமி முஸ்கின் மற்றும் அவளது தம்பி ரித்திக் ஆகியோரை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்து தரப்பிலும் எழுந்தது. எந்த வகையிலும் கொலையாளிகளுக்கு கருணை காட்டக்கூடாது என்று பெண்கள் ஒட்டு மொத்தமாக கோரிக்கை வைத்தனர்.

அப்போது கோவை போலீஸ் கமி‌ஷனராக இருந்த சைலேந்திரபாபு தலைமையில் போலீசார் துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடித்தனர். கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ், அவனது கூட்டாளி மனோகரன் இருவரும் திட்டம் போட்டு சிறுமி முஸ்கின், சிறுவன் ரித்திக் இருவரையும் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது. பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி முஸ்கின் மீது தவறான பார்வையை வைத்திருந்த டிரைவர் மோகன் ராஜ், மனோகரன் இருவரும் முஸ்கினை துடிக்க துடிக்க கற்பழித்து கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் டிரைவர் மோகன் ராஜை, போலீசார் பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய மோகன்ராஜ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது கூட்டாளி மனோகரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டான். இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

2 ஆண்டுகளுக்கு பிறகு 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. இதனை எதிர்த்து மனோகரன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையும் 2 ஆண்டுகள் நடைபெற்றது.

2014-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி ஐகோர்ட்டும் மனோகரனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து மனோகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனோகரனின் மேல்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இதில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அப்போது மனோகரனின் தூக்கு தண்டனையையும் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மனோகரன் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நரிமன், சூர்யகாந்த், சஞ்சீவ்கன்னா ஆகிய 3 பேர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனோகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. 4-வது முறையாக மனோகரனின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மனோகரனின் தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி நீதிபதிகள் நரிமன், சூர்யகாந்த் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் மற்றொரு நீதிபதியான சஞ்சீவ்கன்னா, மனோகரனுக்கு சிறை தண்டனை மட்டும் போதும் என்று தனது கருத்தை பதிவு செய்தார். இருப்பினும் 2 நீதிபதிகள் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடி ஆனது.

2012-ம் ஆண்டு கோவை கோர்ட்டு தூக்குதண்டனை விதித்தபோதிலும் கடந்த 7 ஆண்டுகளாக மேல்முறையீட்டு மனுக்களால் குற்றவாளி மனோகரன் தப்பி வந்தான். கொலை சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்