Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நவம்பர் 10, 2019 05:09

சேலம்: தமிழகத்தில் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான சொத்து மதிப்பு ரூ.1 லட்சமாக இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும்’ என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
 
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்களில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா கொங்கணாபுரத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.25.89 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 723 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 9 லட்சத்து 72 ஆயிரத்து 216 மனுக்கள் பெறப்பட்டன. இதில், தகுதியுள்ள 5 லட்சத்து 11 ஆயிரத்து 186 மனுக்கள் ஏற்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் 4 லட்சத்து 37 ஆயிரத்து 492 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 23 ஆயிரத்து 538 மனுக்கள் நிலுவையில் உள்ளது.

அதேசமயம், நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, முதியோர் உதவித்தொகை பெற சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரம் என்று இருந்ததை மாற்றி ரூ.1 லட்சம் சொத்து மதிப்பு இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கிராமத்தில் வாழ்கிற மக்கள் பிறரிடம் நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டியிருந்தாலும் அதற்கு பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களுக்கும், புதிய பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் தீர்வு காணப்பட்டுள்ளது. குடியிருக்க வீடுகள் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படும். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

தமிழகத்தில் பெய்யும் பருவமழையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் இருப்பதற்காக நீர் மேலாண்மை அமைப்பு மூலம் குடிமராமத்து திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காணமுடிகிறது.

கோதாவரி-காவிரி இணைப்பு என்பது எனது கனவு திட்டம் ஆகும். அது நிச்சயம் நிறைவேற்றப்படும். அந்த திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருகிறது. பிரதமர் மோடியும் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

அதேபோல், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து அந்த திட்டத்தை செயல்படுத்தும். அதாவது, கோதாவரி-காவிரி, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் என தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வளவு தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மட்டும் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆட்சி நடக்கிறதா? இல்லையா? என்று கேள்வி கேட்கிறார். பல்வேறு திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்.

எங்களது திட்டங்கள் எல்லாம் எதிர்காலத்திலும் விவசாயிகள் பயனடைகின்ற திட்டங்களாக இருக் கின்றது. எதிர்கால தமிழகம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும் எனவும், வேளாண் பெருமக்களுக்கு தேவையான நீர், குடிநீருக்கு தேவையான நீர் முழுவதுமாக வழங்க வேண்டும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எங்களுடைய லட்சியம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தலைப்புச்செய்திகள்